நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 2, 2019

20 ஆம் திருத்தச் சட்டத்தால் பிரதமர் ரணிலுக்கு வரவுள்ள புதிய சிக்கல்!


20 ஆம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்கும் 20 ஆம் திருத்தச்சட்டம் குறித்து பிரதமர் தனது அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் பிரதமர் யார் என்ற பிரச்சினை இருந்தது. ஆனால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றில் அழுத்தம் கொடுக்கவுள்ளோம்.

20 ஆம் திருத்தச்சட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று, அதன் அறிவுறுத்தல்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, அதனைக் கவனத்தில் கொண்டு பிரதமர் தனது அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற நாம் முயற்சிப்போம். இதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பிற்கு சென்றால் நல்லது. மக்கள் அரசியல்யாப்பு மாற்றத்தை தீர்மானிக்கட்டும். இதற்கு நாடாளுமன்றில் கதவடைக்க வேண்டாம் என, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

225 பேர் இதனை முடிவெடுக்காமல் மக்கள் ஆணைக்கு வழிவிட நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுங்கள்” என அநுரகுமார மேலும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!