மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 2014ஆம் ஆண்டு பெறப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் நேற்று சிறிலங்கா அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்துலக பிணைப் பத்திரங்களின் மூலம் பெறப்பட்ட இந்தக் கடன் நேற்று திருப்பிச் செலுத்தப்பட்ட தகவலை பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற பல கடன்களைத் தருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தக் கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை அரசாங்கம் பேணி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், பரிமாற்றங்கள், நட்புநாடுகளின் தவணைக்கடன்கள், அனைத்துலக பிணைப் பத்திரங்களின் மூலம் கடன்களைப் பெற்று, வெளிநாட்டு நாணயக் கையிருப்பை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளில் இருந்து, 52 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பங்களினால், சிறிலங்காவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 1 பில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Note: Only a member of this blog may post a comment.