நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

கொழும்பு கோட்டையிலிருந்து நாளைக் காலை புறப்படும் நல்லிணக்கத் தொடரூந்து…!

Monday, December 31, 2018
Tags


கொழும்பு கோட்டையிலிருந்து நாளைக் காலை புறப்படும் நல்லிணக்கத் தொடரூந்து…! தரித்து நிற்கும் ரயில் நிலையங்களில் உதவிகளை ஒப்படைக்க வேண்டுகோள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாத்தறையிலிருந்து கிளிநொச்சிக்கு ரயிலொன்று நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 6.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த ரயில், அன்றைய தினம் நண்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சியைச் சென்றடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து இன்று (31) நண்பகல் 2.15 க்கு உதவிப் பொருட்களுடன் புறப்படும் விசேட ரயிலொன்று, இன்று இரவு 6.30 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது. இதில் கொண்டுவரப்படும் உதவிப் பொருட்கள் யாவும் அலங்கரிக்கப்பட்ட ரயிலொன்றில் மாற்றப்பட்டு நாளை, செவ்வாய்க்கிழமை காலை 6.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் புறப்படவுள்ளது.

அதேநேரம், ரயில்வே ஊழியர்களால் திரட்டப்பட்ட உதவிப் பொருட்களுடன் காங்கேசன்துறையிலிருந்து ரயிலொன்று கிளிநொச்சி நோக்கிப் புறப்படவுள்ளது. கொழும்பிலிருந்து புறப்படும் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயிலும் கிளிநொச்சியை அடைந்ததும் ரயிலில் கொண்டுவரப்பட்ட உதவிப் பொருட்கள் யாவும் கிளிநொச்சி அரச அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்த ரயில்சேவை இடம்பெறவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து றாகம கம்பஹா வெயாங்கொட மீரிகம பொல்கஹவெல குருநாகல் கணேவத்த மாஹோ கல்கமுவ அநுராதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் தரித்துச் செல்லும்.

மக்கள் தமது நிவாரணப் பொருட்களை இந்த ரயிலில் கையளிக்கலாம். இப்பொருட்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இலங்கை ரயில்வே திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2017இல் தெற்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது வடக்கு மக்கள் 25 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை உதவியாக வழங்கி பங்களிப்புச் செய்தமையும் ரயில் சேவையை பாதுகாக்கும் அமைப்பு நினைவு கூருகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்