நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன?

Saturday, December 29, 2018
Tagsகடந்த வியாழக்கிழமை இரவு சிஎம்ஆர் நடத்திய  ‘கருத்துப் பகிர்வு’ நிகழ்ச்சியில்  ததேகூ சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன? என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

பல   நேயர்கள் கொடுத்த  தலைப்பை விட்டுவிட்டு வேறெங்கெல்லாம் சுற்றி வந்தார்கள். அவர்களைப் பட்டியில் அடைக்க  நெறியாளர் மெத்தப்பாடு பட்டார்.

ஒன்று மட்டும் தெரிந்தது. எல்லோரும் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு பிடி பித்தார்கள். அவரை பயங்கர வில்லன் போல் சித்தரித்தார்கள்.

விக்கிரமசிங்க ஒரு நரி. அவன்தான் புலிகளை அழித்தவன் என அவர் மீது  சரமாரியாகக் குற்றங்களை அடுக்கினார்கள்.

அதைக் கேட்ட போது விக்கிரமசிங்க இவ்வளவு பெரிய சூரனா?  எனக்கு இவ்வளவு நாளும் இது தெரியாமல் இருந்துவிட்டதே என எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

கருணாவின் விலகலுக்கு விக்கிரமசிங்க காரணம் என்ற நினைப்பே இந்த அர்ச்சனைக்குக் காரணம் என நினைத்தேன்.

வேடிக்கை என்னவென்றால் புலிகளைப் பூண்டோடு துடைத்து  அழித்த ராஐபச்சா பற்றி ஒருவராவது  வாய் திறக்கவில்லை.

விக்கிரமசிங்க இனச் சிக்கலைப் பேசித் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் அன்று இருந்தார். இன்றும் அப்படியான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்.

முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் ப. நடேசன் தலைமையில்  சரண் அடைந்த 300 க்கும் அதிகமான புலிகளையும் வட்டுவாகலில் மே 18 அன்று சரண் அடைந்த நூற்றுக்கும் அதிகமான  இரண்டாம் மட்ட புலித் தலைவர்களையும் இராணுவம் கோழைத்தனமாகச் சுட்டுக் கொன்றது. சுடுமாறு கட்டளையிட்டது என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. வெளிநாட்டில் இருந்த ஜனாதிபதி ராஜபக்சா போர் முடிந்த பின்னரே நாடு திரும்பினார். இராணுவ தளபதி சரத் பொன்சேகா சீனா சென்றிருந்தார். இன்றைய ஜனாதிபதி சிறிசேனா பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். கோத்தபாய ராசபக்சா பக்கமே பலர் விரல் நீட்டுகிறார்கள்.

இலங்கையில் ஐனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள்  பேணப்பட்டாலே  தமிழ்த் தரப்புக்கு நல்லது. மகிந்த ராசபக்சாவின் சர்வாதிகார ஆட்சியில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். அவரது ஆட்சியின் போது 25 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். ஜனவரி 8, 2015 க்குப் பின்னர் ஒரு தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்படவில்லை. அவர்கள் மீதான நெருக்குவாரமும் இல்லை.

இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொலீஸ் அதிகாரம்  பதவிக்கு வந்த  தேசிய அரசால்  புடுங்கப்பட்டது. ராஐபக்சா காலத்தில் மன்னர்கள் போல் சடக்கில் உலாவந்த இராணுவம் முகாம்களுக்குள்  முடக்கப்பட்டது.

ஐனநாயகத்துக்கான இடைவெளி அகன்றுள்ளது. அதன் பலனை சிங்கள மக்களை விட தமிழ்மக்கள்தான் அனுபவிக்கிறார்கள்.

சட்டவாக்கம், நீதித்துறை, நிறைவேற்றுத்துறை மூன்றுக்கும் சமமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ததேகூ காண்பித்துள்ளது.

நாட்டின் அரசமைப்பை  ததேகூ பாதுகாத்துள்ளார்கள் என அமைச்சர்  இலட்சுமன்  கிரியல்ல புகழாரம் சூட்டியுள்ளார்.

வானொலியில் வந்தவர்கள் கருணாவை விமர்ச்சிக்கவில்லை. அவர்தான்  போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர். அவர்தான்  3,000 புலி வீரர்களைத்  தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வீட்டுக்குப் போகுமாறு  கட்டளையிட்டவர்.

விக்கிரமசிங்காவின் பதவி ஐனாதிபதி சிறிசேனாவால் பறிக்கப்பட்ட போது அது இலங்கை அரசின் அரசியல் யாப்புக்கு எதிரானது ஐனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று  ததேகூ சொல்லியது. அதுதான் நேயர்களது கொதிப்புக்குக் காரணம் என நினைக்கிறேன். சில நேயர்கள் ததேகூ நடுநிலமை வகித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதாவது ததேகூ மகிந்த ராஜபக்சா பக்கம் நின்றிருக்க வேண்டும் என்றார்கள்.

விக்கிரமசிங்க நரியாக இருக்கலாம். பரியாக இருக்கலாம். அதுவல்ல சிக்கல். விக்கிரமசிங்க புலிகளை வீழ்த்திவிட்டார், ஒழித்துவிட்டார் என்று ஓலமிடுவது புலிகளை கொச்சைப்படுத்தும் முயற்சி என்பது எனது எண்ணம்.

ஒருவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று சொல்வதை விட நான் அவனிடம் ஏமாந்து போனேன் என்று சொல்வதுதான் சரி.

வி.புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கருணா வி.புலிகளை காட்டிக் கொடுக்க முடிவு எடுத்து விட்ட காரணத்தாலேயே விக்கிரமசிங்க அவரை இழுத்து எடுத்திருக்க வேண்டும்.

கருணாவை வி.புலிகள் இயக்கத்தில் இருந்து விக்கிரமசிங்க இழுத்து எடுத்துவிட்டார் என்பதை விட கருணா இயக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ததேகூ என்ன சாதித்திருக்கிறது என்ற கேள்விக்குப் பதில்,

(1) அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகளை ததேகூ தனது  ஆதரவு சக்தியாக  வைத்திருக்கிறது.

(2) இலங்கையின்  இனச்சிக்கலை ஐநாமஉ பேரவையில் ஒரு பேசு பொருளாக மாற்றியிருக்கிறது.

(3) ஐநாமஉ பேரவையில் 2015 இல் 30-1 தீர்மானத்தையும் 2017 இல் 34-1 தீர்மானத்தையும் நிறைவேற்றத் ததேகூ காரணமாக இருந்திருக்கிறது.

(4) ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் ஆதரவுக் கட்சிகளும் அரசியல் யாப்பு யோசனைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அரசியல் யாப்பு யோசனைகளுக்கு எதிராக எதையும்  முன்வைக்கவில்லை.

(5) வலிந்து காணமல் போனோர் பற்றி ஆராய சட்டம் இயற்றப்பட்டு ஒரு ஆணைக்குழு விசாரணை நடத்திவருகிறது.

(6) போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கு முகமாக ஒரு சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது.

(7) இராணுவம் கைப்பற்றி தன் வசம் வைத்திருந்த  தனியார் காணிகளில் 60 விழுக்காடு விடுவிக்கப்பட்டுள்ளது.

(7.1) சம்பூரில் 1055 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. கடற்படை வசம் இருந்த 237 ஏக்கர் காணி இதில் அடங்கும். கடற்படைத்தளம் முற்றாக வேறு இடத்துக்கு அகற்றப்பட்டது. இந்தக் காணிகளில் 818 ஏக்கர் காணி இராசபக்சா காலத்தில் Srilanka Gateway Industries Ltd என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.  அந்த நிறுவனம் அதில் அ.டொலர் 4 பில்லியன் (4000 கோடி) கனரக தொழிற்சாலைகள் நிறுவ திட்டமிட்டிருந்த்து.  இந்த காணி விடுவிக்கப்பட்டதற்கு  சனாதிபதி  சிறிசேனா முக்கிய காரணியாக இருந்தார்.  மொத்தம் 555 குடும்பங்கள் மீள் குடியேறினார்கள்.

(7.2) வலி வடக்கில் இராணுவம் வசம் இருந்த 6,381.5 ஏக்கர் காணியில் அண்ணளவாக 3,500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

(7.3) கேப்பாப்புலவில்  இராணும் பிடித்து வைத்திருந்த  482 ஏக்கர் காணியில் 412 ஏக்கர் காணி விக்கப்பட்டுள்ளது.

(7.4)  மயிலிட்டியில் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்கு உட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி கடந்த ஏப்ரில் 18, 2018 அன்று விடுவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய பகுதியில் உள்ள 54 ஏக்கர் காணி யூலை 03, 2017 இல் விடுவிக்கப்பட்டது. இதில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

(7.5) வடகிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

(7.6) இந்த மாதம் முடியுமுன்னர் வடக்கு மாகாணத்தில்  அரச மற்றும் தனியார் நிலங்களில் இருந்து 263.66 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவுள்ளது. இதனால்  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 43.13 ஏக்கர் தனியார் காணியும்  1.47 ஏக்கர் அரச நிலமுமாக 44.60 ஏக்கர் நிலமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 17.71 ஏக்கர் அரச நிலமும் 35.24 ஏக்கர் தனியார் நிலமுமாக 52.95 ஏக்கர் நிலம்விடுவிக்கப்படவுள்ளது. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 56.09 ஏக்கர் அரச நிலம் விடுவிக்கம்படும்  43.38 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.  மன்னார் மாவட்டத்தில் 5 ஏக்கர் அரச காணியும் வவுனியா மாவட்டத்தில் 39.64 ஏக்கர் காணியும் 7.64 ஏக்கர் தனியார் நிலமுமாக 47.28 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்படுகின்றது.

(8) வடக்கு கிழக்கில்  2017-2018 காலப் பகுதியில் இந்திய அரசின் உதவியோடு 40,000 சிமெந்து வீடுகள் கட்டப்பட்டன.

(9) வெள்ளைவான் கடத்தல் கலாசாரம் ஒழிக்கப்பட்டது.

(10) சட்டத்தின் முன்  அனைவரும் சமம் என்ற கோட்பாடு நியாயமான முறையில் முன்னெடுக்க முடிந்துள்ளது. கொழும்பில் 2008 இல் 11 தமிழ் இளைஞர்களை வெள்ளைவானில் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடற்படை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

(11) 19 ஏ சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் ததேகூ பாரிய பங்களிப்பு செய்துள்ளது. அதன் கீழ் 11 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு நாட்டின் சனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளதாக ஐதேமு அமைச்சர் கூறியுள்ளார்.

ததேகூ சாதிக்கப்போவது என்ன?

(1) முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த ஆண்டிற்கான விசேட திட்டமாக வட்டுவாகல் பாலம் உள்ளிட்ட சீரமைப்புப் பணியும் 468 குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டின் கீழாக 1,905 ஏக்கர் மரமுந்திரிகைத் தோட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டு  குறித்த மர முந்திரைகைத் தோட்டத்திற்காக 72 ஆயிரம் மரமுந்திரிகை வழங்கப்படுவதோடு அதன் முதல் கட்டப் பணிகளிற்காக 7.2 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(2) அத்துடன் நடுகை காலத்தில் இருந்து 3 ஆண்டுகளில் பெறப்படும் மரமுந்திரியை அப்படியே சந்தைப்படுத்தும்போது உற்பத்தியாளர்கள் குறைந்த இலாபத்தையே ஈட்டமுடியும் . ஆனால் மரமுந்திரியைப் பதப்படுத்தி விற்பனை செய்யும்போது அதிக இலாபம் நேரடியாக உற்பத்தியாளர்களுக்குச் சென்றடையும். எனவே மாவட்டத்தில் அதற்கான நிலையம் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

(3) இதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் அடுத்த ஆண்டு வீதி சீரமைப்பிற்கு உரூபா 2 ,000  மில்லியன்  மருதங்கேணிப் பிரதேசத்தில் 50 ஏக்கர் மரமுந்திரைத் திட்டம் என்பன முன்னெடுப்பதோடு வடமராட்சிப் பகுதியில் உள்ள லகூன் சீரமைப்பு, ஆறுமுகம் திட்டத்தின் கீழான உப்பாறுப் பகுதி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் நன்நீர் தேக்கத் திட்டம் ஆகியவற்றிற்கான அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு திட்டித்திற்கான விரைவு படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

(4) வடக்கு, கிழக்கில் செங்கல் மற்றும் ஓடுகளைக் கொண்ட 20,000 வீடுகளை நிர்மாணிக்க 2019 வரவு செலவுத் திட்டத்தில் உரூபா 750 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

(5) கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் திட்டங்களுடன் சிறப்பாக முன்மொழியப்பட்ட பரந்தன் முதல் முருகண்டி வரையிலான ஏ9 பாதைக்கான மாற்றுப் பாதையும் தார்ப்படுக்கை வீதியாக அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பணிக்கான உருபா 1,665 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆயிரம் ஏக்கர் மரமுந்திரிகைத் திட்டம் மற்றும் கிளிநொச்சி பொதுச் சந்தைக் கட்டிட அபிவிருத்திக்கு உரூபா 765 மில்லியன் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

(6) காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் 2018 ஆம் ஆண்டில் முழுமையாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அலுவலகத்தை ஸ்தாபிக்க உரூபா 1400 மில்லியன்  ஒதுக்கப்பட்டுள்ளது.

(7) புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,600 முன்னாள் போராளிகளுக்கு அவர்களின் திறன்களின் அடிப்படையில் தேசிய தொழில்சார் தகைமை சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, தொழில் தகைமையுள்ளவர்களாக அவர்களை உருவாக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

(8) குறைந்தபட்சம் 5 முன்னாள் போராளிகளை தொழிலில் இணைத்துக்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு, தொழிலாளர் ஒருவருக்கு ஆகக்கூடியது மாதம் 10,000 ரூபா என்ற வகையில் 50 விழுக்காடு  த சம்பள மானியம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

(9) வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கான விசேட நிலையமொன்றும்  நிறுவப்படவுள்ளது.

(10) போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை சிறிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உருபா 25 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(11) நுண் கடனாளிகளை கிராமிய கூட்டுறவு வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்களினூடாக கடன்களிலிருந்து மீட்பதற்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, இதற்கென உருபா 1000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(12) சிவனொளிபாத மலை, மடு, கோணேஸ்வரம் முன்னேஸ்வரம் மற்றும் நல்லூரில் யாத்திரிகர்கள் தங்குமிடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

(13) மயிலிட்டி துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. (http://gtamils.com/2018/12/11/development-of-the-port-of-mayilithi-port/

இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் உருபா 245 மில்லியன் அலை தடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

(14) காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிதியுதவியாக உருபா 6.9 பில்லியனை (அ.டொலர் 45.27 மில்லியன்)  இந்தியா  வழங்கியுள்ளது. இந்த நிதி உதவியில் பிராந்திய மற்றும் வணிக துறைமுகமாக காங்கேசன்துறை பரிணமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(15) பலாலி விமான நிலையம் இந்திய அரசின் உதவியுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதால்,  இந்தியாவுக்கும் மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் வட மாகாண மக்கள் நேரடியாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

(16) Colombo (News 1st) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 300 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்தப் பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியை சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்த சுமார் உரூபா9,098 மில்லியன்  முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் பிரகாரம், தொழிற்சாலையை அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வணிக  அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்  வழங்கியுள்ளது.

(17) Colombo (News 1st) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு  முதல் மீண்டும் இயங்கவுள்ளது.இதற்காக முன்வைக்கப்பட்ட ஆவணத்துக்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு ரிவித்துள்ளது.

(18) முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த ஆண்டு  தொடக்கப்படவுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

(19) வட, கிழக்கு பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை, வட, கிழக்கு பிரதேசங்களின் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், படையினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் சமூக தாக்கங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம், வட்டகச்சி விவசாயப் பண்ணை விடுவிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது விரிவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அத்துறை சார்ந்த  சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றி 17-12-2018 இல் சனாதிபதி  சிறிசேனா தலைமையில் நடந்த  வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான சனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வில்  கலந்துரையாடப்பட்டது.

அதனை அடுத்து சனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இனங்காணப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் தெரிவித்ததுடன், தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச – தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வட, கிழக்கு பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்தோடு தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஐனாதிபதி  வலியுறுத்தினார். (http://www.virakesari.lk/article/46539)

வின்னேஸ்வரன் போன்ற திடீர்  அரசியல்வாதிகள் இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதுதான் முக்கியம், பொருளாதார அபிவிருத்தி அல்ல என்கிறார். ததேகூ  அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இனச் சிக்கலுக்குத் தீர்வு, பொருளாதார அபிவிருத்தி இரண்டும் சமாந்தரமாக இடம்பெற வேண்டும் என்பதே ததேகூ இன் கோட்பாடாகும்.முப்பது ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அடிப்படைத் தேவைகளான வீடு, குடிதண்ணீர், பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழில் வாய்ப்பு போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும்.

இனச் சிக்கலுக்கு தீர்வு காணும்வரை மக்கள் உண்ண உணவு, குடிக்கத் தண்ணீர், படுத்துறங்க வீடு வாசல், தொழில் வாய்ப்பு போன்றவற்றுக்கு மக்கள்  காத்திருக்க முடியாது. அப்படிக் காத்திருக்கச் சொல்வது அவர்களுக்கு இழைக்கப்படும் இரண்டகமாகும்.

ததேகூ கேட்டதெல்லாம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். நினைத்ததெல்லாம் கைகூடவில்லை என்பதும் சரிதான். ஆனால் காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் போனோர் பற்றிய விசாரணை, அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 217 தமிழ்க் கைதிகள் சிறையில் இருந்தார்கள். இப்போது 107 பேர்தான் சிறையில் இருக்கிறார்கள். குற்ற ஆவணம் தாக்கல் செய்யாது விசாரணை ஏதுமின்றி ஆண்டுக்கணக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு ததேகூ வலியுறுத்தி வருகிறது.

மேலே கொடுத்துள்ள ததேகூ இன் சாதனைப் பட்டியல் முழுமையானது அல்ல. இடம் கருதி பல விடுபட்டுப் போயுள்ளன.

ததேகூ  சரியான பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. பயணிக்க வேண்டிய பாதை கரடு முரடானது.

சனவரி 2015 நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு  தென்னிலங்கையில் உள்ள  இரண்டு பகைககளில் ஒன்றைத் துணையாக ததேகூ  கொண்டுள்ளது.  அதற்குப் பெயர்தான் அரசியல்  சாணக்கியம். அதனையே ததேகூ தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.