நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

வடக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, December 28, 2018
Tags


வடக்கில் பெய்துவரும், அடைமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம், மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில், 38 ஆயிரத்து 739 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மூவாயிரத்து, 258 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரத்து, 424 பேர், இடம்பெயர்ந்த நிலையில், 32 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைகப்பட்டுள்ளதாக, மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை காரணமாக 472 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 4522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு, 24 ஆயிரத்து 184 குடும்பங்களை சேர்ந்த 74 ஆயிரத்து, 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரத்து, 622 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து, 379 பேர், 17 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சியல், 386 வீடுகள் முழுமையாகவும், 2223 வீடுகள் பகுதியவிலும் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 104 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 923 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அங்கு, ஆயிரத்து 566 குடும்பங்களைச் சேர்ந்த, 4 ஆயிரத்து, 889 பேர் இடம்பெயர்ந்து, 11 முகாம்களில் தங்கியுள்ளனர்.முல்லைத்தீவில் 86 வீடுகள் முழுமையாகவும், 2297 வீடுகள் பகுதியவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து, 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தினால் மருதங்கேணி பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், வவுனியா மாவட்டத்தில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் இடம்பெயர்ந்த நிலையில், மூன்று முகாம்களில் தங்க வைக்பபட்டுள்ளனர்.

அதேபோல், மன்னார் மாவட்டத்தில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் இடைத்தங்கள் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.