நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

சம்பந்தனிடம் மன்னிப்புக் கோரிய கரு ஜெயசூரிய! வெளிவந்த உண்மைகள்

Saturday, December 29, 2018
Tagsஎதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான குழப்பம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சபையில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியமை சட்டத்துக்கு முரணானது என்றும், பெரும்பான்மைவாதச் சிந்தனையின் வெளிப்பாடு என்றும் கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கு அமைவாக, சபாநாயகரின் அறையில் சந்திப்பு நடைபெற்றது.

“மஹிந்த ராஜபக்ஷவை அவசரப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தமை தவறு. அதற்காக மன்னிப்புக் கோருகின்றேன். உங்களுடன் கலந்துரையாடாமல் அறிவித்தமைக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.

நான் இந்தப் பதவியிலிருந்து விலகவேண்டுமானால் அதற்கும் தயாராக இருக்கின்றேன்” என்று சபாநாயகர் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள், நாடாளுமன்றச் சம்பிரதாயங்களுக்கு அமைவாகச் செயற்படுமாறு சபாநாயகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.