Thursday, November 22, 2018

இசையும் மகப்பேறும்!



"அக்கா எப்படி இருக்கீங்க?" என்று சொல்லிக் கொண்டே நுழைந்தாள் வர்ஷா. "வாடியம்மா எப்படி இருக்க?  மசக்கை எல்லாம் சரியாயிருச்சா?" என்று கேட்டாள் நித்யா. "இப்ப அஞ்சு மாசம் ஆயிடுச்சுக்கா….ரொம்ப போரடிக்குது. அதான் உங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்னு வந்தேன்" என்றாள்  வர்ஷா . 

"நானும் உன்ன பாக்கணும்னு தான் நெனச்சேன்,  உன்கிட்ட கொடுக்க சில புத்தகங்களையும் சிடிகளையும் எடுத்து வச்சிருக்கேன்.
   
       
   
  அதை கேளு உனக்கு கொஞ்சம் நேரம் போகும், அப்படியே உன் குழந்தைக்கும் நல்ல சூழல் கிடைச்ச மாதிரி இருக்கும்" என்றாள் நித்யா. "அக்கா பாட்டுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இருக்கா?" என்று வர்ஷா கேட்டாள்.  "இருடி இசையை பத்தியும், புத்தகத்தை  பத்தியும் ஒரு கட்டுரை படித்தேன் அதை காண்பிக்கிறேன்" என்று சொல்லி வாசிக்க ஆரம்பித்தாள் நித்யா. 

"இசைக்கு பல்வேறு தன்மைகள் உள்ளன.  ஆராய்ச்சி அதை உறுதியாக சொல்லா விட்டாலும், நமக்குப் பிடித்த இசையை நாம் கேட்கும்போது அது நம்முடைய நாளை புதுப்பிப்பது போன்று இருக்கும். இசை கருவிலிருக்கும் நம்முடைய குழந்தைக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்க வல்லது.

உங்கள் குழந்தையால் ஒலிகளை 16வது  வாரத்திலிருந்து கண்டறிய முடியும். அதை காற்று பெரு வேகத்தோடு செல்வது போன்ற ஒலியாக தான் முதலில் உணர்வார்கள். ஆனால் 24 வது வாரத்தில் இருந்து வெளி உலக ஒலிகளை அவர்களால் அறிந்து கொள்ள முடியும். கருவில் இருக்கும் குழந்தை ஒலிக்கேற்ப தலையை அசைக்கும் என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கருவில் இருக்கும் குழந்தைக்கு இசை என்பது என்னவென்று தெரியாமல் இருந்தாலும், அதை தாளம் போன்ற ஒலி அலைகளாக அவர்களால் உணர முடியும். இசை குழந்தையின் அறிவுத் திறனையும், செவிப் புல உணர்வுகளையும் தூண்டுவதில் உதவுகிறது.
தாள அதிர்வுகளை குழந்தையால் உணர முடியும். அந்த இசையானது குழந்தையின்  ஒட்டுமொத்த உடல் அசைவுகளையும் செம்மைப்படுத்துகிறது.
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பின்பு கூட இசை, குழந்தையை அமைதிப்படுத்த உதவுகிறது. குழந்தைகள் தங்கள் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது கேட்ட இசையை, வெளி உலகத்திற்கு வந்து கேட்கும்போது இரண்டையும் அவர்களால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனம் சோர்வான தருணங்களிலும் மற்றும் மன உளைச்சல் போன்ற சூழ்நிலையிலும்,  இசை அவர்களை அமைதிப்படுத்தி தேற்றுகிறது.
நடைமுறைப்படுத்தும் வழிகள்:
   
       
   
 
நேர்மறையான எண்ணங்களை பிரதிபலிக்கும் புத்தகங்களை சத்தமாக வாசிப்பதன் மூலம், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் அதைக் கேட்க முடியும்.
உங்கள் வயிற்றில் தினமும் கை வைத்து நேர்மறையாக பேசுங்கள்.  உங்கள் குழந்தை எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையும் கூட பேசலாம். லவ் யூ என்று அடிக்கடி கூறுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே நல்ல நட்புறவை கட்டி வளர்க்கும்.
உங்களைச் சுற்றி எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பவர்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அது உங்களையும் உங்கள் குழந்தையையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்கும்.
இசையும் புத்தகமும் கர்ப்ப காலத்தில் உங்கள் மனதுக்கும்,உடலுக்கும் ஆற்றலைத் தருகிறது. 
கடைசியாக மற்றும் மிக முக்கியமான குறிப்பு என்னவென்றால் 65 டெசிபலுக்கு மேல் உண்டாகும் ஒலிகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல. எனவே 65 டெசிபலுக்கு குறைவாக ஒலியை வைத்து இசையைக் கேட்டால் நிச்சயமாக உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மன ரம்மியமான சூழலை உருவாக்கித் தரும்.
   
       
   
  " 

என்று கட்டுரையை வாசித்து முடித்தாள் நித்யா. "அக்கா சீக்கிரம் அந்த புத்தகத்தையும் சிடியையும் குடுங்க, நான் நாளைக்கு வந்து பேசுறேன்" என்று சொல்லிவிட்டு,  புத்தகத்தையும் சிடியையும் வாங்கிக்கொண்டு விடைபெற்றாள் வர்ஷா.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

wintamila