நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, November 29, 2018

சென்டினல்கள் ஏன் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்? அவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!


யார் அவர்களின் நிலத்துக்குள் சென்றாலும் அவர்களின் காட்டை அழிக்க வருவதாகத்தான் நினைத்துக் கொள்வார்கள். சென்டினல்கள்… கடந்த ஒரு வாரமாக சர்வதேச அளவில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை.

அதிக இணையத் தேடல்களுக்கு உள்ளான ஒரு வரலாறு. தாங்களுண்டு, தங்கள் வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்து வந்த அந்த மக்கள், இன்று சர்வதேச சமூகத்தின் முன் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். அவர்களின் உலகுக்குள் அந்நியர்கள் நுழைவதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அது மீண்டும் நிகழ ஆரம்பித்திருக்கிறது.

அந்தமான் – நிகோபார் தீவுகளில், வெளியுலகுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக வசித்துவரும் பழங்குடி மக்கள்தான் ‘சென்டினல்’கள். கடந்த 2004-ம் ஆண்டு அந்தமான் நிகோபார் தீவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது, இந்த மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக விமானத்தின் மூலம் அதிகாரிகளை அனுப்பியது மத்திய அரசு. சென்ற விமானங்கள் போன வேகத்தில் திரும்பி வந்தன.

சென்டினல் பழங்குடி மக்கள் விமானத்தின் மீது அம்புகளை வீசித் தாக்குதல் நடத்தியதே அதற்குக் காரணம். அதைத் தொடர்ந்து இந்த மக்களின் வாழ்வியலிலும் வாழ்விடங்களிலும் ஒருபோதும் தலையிடப்போவதில்லை எனக் கடந்த 2005-ம் ஆண்டு அறிவித்தது மத்திய அரசு.

இந்தத் தீவுக்குள் யாரும் போகக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியக் கடற்படையால், இந்தத் தீவைச் சுற்றியுள்ள மூன்று கடல் மைல்கள் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டது. சென்டினல் தீவு மட்டுமல்ல, அந்தமானில் உள்ள 29 தீவுகளையும் மற்றவர்கள் நுழையத் தடை செய்யப்பட்டப் பகுதியாக இந்திய அரசு அறிவித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அதற்கான தடை நீக்கப்பட்டது. இருந்தபோதும் அந்தமான் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.

இந்நிலையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பாக, எந்தவித முன் அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன், இத்தீவுக்குள் செல்ல முயன்று, அந்த மக்களால் கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்பாகவும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.சென்டினல்கள், வெளியுலக மனிதர்களைக் கண்டால் அவர்களைத் தாக்குவது ஏன்?

மானுடவியல் பேராசிரியரும் `தமிழர் மானுடவியல் தமிழகப் பழங்குடிகள் போன்ற நூல்களை எழுதியவருமான பக்தவத்சல பாரதியிடம் கேட்டோம்.

“இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழுகின்ற பழங்குடி மக்களையும், அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழுகின்ற பக்தவத்சல பாரதி சென்டினல் மக்களையும் நாம் வேறு வேறாகத்தான் பார்க்க வேண்டும். சென்டினல் பழங்குடி மக்களுக்கு மிக நீண்ட பாரம்பர்யம் இருக்கிறது.அவர்களின் பூர்வீகத்தின்மீது அவர்களுக்கு மிகப்பெரிய பற்றுதல் இருக்கிறது. ஆரம்பக்காலத்தில் இருந்தே வெளியாட்களை அவர்களின் நிலத்துக்குள் அனுமதிப்பதில்லை. அவர்களின் தீவை யார் நெருங்கினாலும், ஆபத்து நெருங்கிவிட்டதாகத்தான் உணர்வார்கள். வெளியில் இருந்து யார் அவர்களின் நிலத்துக்குள் சென்றாலும் அவர்களின் காட்டை அழிக்க வருவதாகத்தான் நினைத்துக்கொள்வார்கள்.

அவர்கள் அப்படி நினைப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காட்டு வளங்களை அபகரிப்பதற்காகச் சென்று, அதைத் தடுக்க முயன்ற பல பழங்குடிகள் ஆங்கிலேயர் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதன் காரணமாகப் பழங்குடி மக்கள் பலர் இறந்து போயிருக்கிறார்கள். வெளியில் இருந்து யார் வந்தாலும் அவர்களின் காட்டை அபகரித்துவிடுவார்கள் என்கிற அச்சம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அதன் காரணமாகத்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள். தற்காப்புக்காக மட்டும்தான் அவர்கள் பிறரைத் தாக்குகிறார்கள்.

அவர்களுக்குத் தேவையான விஷயங்கள் அனைத்துமே காட்டிலேயே கிடைத்துவிடுகின்றன. தன்னிறைவான ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் மற்றவர்களின் எந்த உதவியும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களை மேம்படுத்தும் எண்ணத்துடன் யாராவது தீவுக்குள் சென்றாலும்கூட, அவர்களுக்கு எதிராக வருவதாகத்தான் நினைத்துக்கொள்வார்கள்.அந்தமான் தீவில் வாழும் பல்வேறு பழங்குடி மக்கள் வெளி உலகத்துடன் நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறார்கள். சென்டினல்கள், ஜாரவா போன்ற பழங்குடி மக்கள்தான் இன்னும் தனித்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என நாம் கேள்வி எழுப்புவது அடிப்படையில் தவறு. மாறிவிட்ட பழங்குடிகளை வேண்டுமானால் அப்படிக் கேள்விக்குட்படுத்தி அதற்கான காரணங்களைக் கண்டறியலாம்’’ என்கிறார் பக்தவத்சல பாரதி.

இது போன்ற காரணங்கள் ஒருபுறமிருக்க, சென்டினல் மக்களுக்கு வெளியுலகில் இருக்கும் நோய்களை எதிர்க்குமளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது. மற்றவர்களிடமிருந்து அவர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது அதனால்தான் அங்கு யாரும் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.மருத்துவ ரீதியாக இது எந்தளவுக்கு உண்மை என்பது பற்றி விளக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத்துறைப் பேராசிரியர் ரகுநந்தனன்பேராசிரியர் ரகுநந்தனன்.

“பழங்குடி மக்களுக்குக் காட்டில் இயற்கையாகச் சூரிய ஒளி நேரடியாகக் கிடைக்கிறது. சுத்தமான காற்றை சுவாசித்து வருகிறார்கள். நல்ல சுகாதாரமான தண்ணீரைக் குடித்து வாழ்கிறார்கள். இயற்கையான காய்கறிகள், பழங்கள் போன்றவை அங்கே கிடைக்கின்றன. அதைச் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான உடலமைப்புடன் இருக்கிறார்கள்.காட்டில் நோய்களை உண்டாக்கக்கூடிய கிருமிகளும் குறைவாகத்தான் இருக்கும். அதனால், வெளியில் இருந்து யாராவது உள்ளே செல்லும்போது செல்பவர்களிடமிருந்து அவர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது.

நம்மைப் போன்று நோய்களுக்கான தடுப்பூசிகளும் அவர்கள் போட்டுக்கொண்டதில்லை. அதனால், மிகவிரைவாக நோய்கள் தாக்கிவிடும். அவர்களின் உணவுமுறை, மருத்துவமுறையும் நமக்குத் தெரியாது. அவர்கள் காட்டை விட்டு வெளியில் வந்தாலும் உடல் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதேபோல் வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்களுக்கும் ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி முறையாகத் தெரிந்துகொண்டு அவர்களை அணுகுவதே நல்லது’’ என பேராசிரியர் ரகுநந்தனன் தெரிவித்துள்ளார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!