நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 21, 2019

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு


இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் குறித்த காலத்தில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.   (மு)

யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட ஆப்கான் அகதிகள் மீளவும் வவுனியா அனுப்பிவைக்கப்பட்டனர்!


வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் 6 பேர் மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் தஞ்சமடைந்திருந்த இவர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அங்கு தங்கியிருப்பதற்கு அச்சமான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அவ்வாறு தங்கியிருந்த 35 பேர் வவுனியா – பூந்தோட்டம் முகாமுக்கு கடந்த 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாகிஸ்தானை சேர்ந்த 19 பேரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 16 பேருமே பூந்தோட்டம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

வவுனியா முகாமில் தங்கவைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் குடும்பமொன்று நேற்று முன்தினம் (19) யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தது.

இவர்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் பொறுப்பேற்றிருந்தார்.

இந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆப்கான் அகதிகள் 6 பேரும் இன்று மீண்டும் வவுனியா பூந்தோட்டம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரட்ணஜீவன் ஹூல்

இந்த அகதிகளை கொண்டுவந்தமை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பதிவை மேற்கொண்டிருந்தோம்.எனினும் நேற்றுக்காலை பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்திருந்தனர்.அங்கு சென்றபோது சைவ தீவிரவாதிகள் அடிக்கப்போகிறார்கள் எமக்குப் பயமாக உள்ளது உடனே வெளியேறவேண்டும் என கூறினார்கள்.என்னைப் பொறுத்தவரை இது பொய்.இது தொடர்பாக சபா நாயகருடன் பேசினேன். அவர் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பேசினார் எனினும் அவர் சொன்னார் எமக்கு பிரச்சனையில்லை் ஆளுநர் சுரேன் ராகவன்தான் அகதிகளை பூந்தோட்டம் முகாமுக்கு செல்லவேண்டும் என கூறினார் என்று.

எனினும் எனது வீட்டில் ஒருவரை வைத்திருப்பதற்கு எனக்கு முழுச்சுதந்திரம் உண்டு எனக் கூறியபோது பொலிஸ் பொறுப்பதிகாரி சபாநாயகருடன் நான் பேசியது தவறு எனத் தெரிவித்தார்.இது எனது அடிப்படை உரிமை. நான் எனது சட்டத்தரணிகளுடன் இது தொடர்பில் பேச எனக்கு ஒரு கால அவகாசம் வேண்டும் என கூறினேன். அதற்கு அவர் வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் தருவதாக தெரிவித்தார்.

எனினும் இரவு 8 மணியளவில் பொலிஸ் ஜீப் எமது வீட்டு வாசலில் வந்து நின்றது. பின்னர் இரண்டு பொலிஸார் வீட்டுக்குள் வந்தனர்.இதன்போது அகதிகள் தமக்கு இங்கிருக்க பயமாக உள்ளதாகவும் தாம் போகப்போவதாகவும் தெரிவித்தனர்.

ஆளுநர் எமக்கு அளித்த உறுதிமொழியை மீறியுள்ளதோடு அவர் அந்த பதவியில் இருக்கவும் தகுதியற்றவர் எனத் தெரிவித்தார்.

நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் பிறப்புச் சான்றிதழைப் பெற வசதி!அனைவரும் பயன் பெற அதிகம் பகிருங்கள்(share)
நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை இன்று (21) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“முன்னைய காலங்களில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பெறும் நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட செயலகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. படிப்படியாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதன்படி அவர்கள் அந்தந்த பிரதேச செயலக பிரிவுகளில் பிறந்தவர்கள் அந்தந்தப் பிரதேச செயலகங்களில் பிறப்பு பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பின்னர், யாழ்.மாவட்டத்திலுள்ள எந்தெந்தப் பிரதேச செயலகத்தில் பிறந்தவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களையும் பெறக்கூடியதாக வசதிகள் செய்யப்பட்டன.
வடமாகாணத்தில் பிறந்தவர்கள் வடக்கில் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னரே இருந்திருந்தாலும், தற்போது, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் அடிப்படையில், நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்திட்டம் எமது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது” என்று யாழ்ப்பாணம் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

தற்கொலைதாரிகள் அனைவரும் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டனர்!


உயிர்த்தஞாயிறு அன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய அனைத்து தற்கொலைதாரிகளின் அடையாளங்கள் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் எனவும், ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் அஹமட் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் இப்ராஹிம் என்பவரின் மகன்மார்களாவர்.

இவர்கள் இருவருடைய மரபணு மாதிரிகளும் இப்ராஹிம் என்பவரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, நீர்கொழும்பு தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது அச்சி மொஹமது மொஹமது அஸ்துன் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த தற்கொலைக் குண்டுதாரியின் பெற்றோர்களின் குருதி மாதிரிகளைப் பெற்று மரபணு சோதனை நடத்தப்பட்டதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த அலாவுதீன் அஹமட் முவாதினின் மரபணுவும் அவருடைய பெற்றோர்களின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளன.

இதேவேளை, தெஹிவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய அப்துல் லதீப் ஜமில் மொஹமட் என்பவருடைய மரபணு சோதனை அவரின் பிள்ளையின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் நசார் மொஹமட் அசாத் என்பவரே மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்குள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது அவரின் தாயாரின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்பது அவருடைய மனைவி மற்றும் பிள்ளையின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தெமட்டகொட பகுதியில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்த பெண், ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் என்பவரின் மனைவி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெமட்டகொட வீட்டில் தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்த மூன்று பிள்ளைகளும் இவர்களுடையவை என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான் என்பது மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் அவருடைய பிள்ளையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட குருதி மாதிரிகளூடாக மரபணு சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.

வேகமாக உயர்கின்றது கடல் நீர்... மூழ்கப் போகும் நகரங்கள்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!


கடல் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதால் பல நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபயம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2100ஆம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அதைவிட இரண்டு மடங்கு உயரும் என்று இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படி கடல் நீர் நிலப்பகுதியில் உட்புகும்போது லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

கடல் மட்டம் 1990 ஆம் ஆண்டு முதல் 2100 ஆம் ஆண்டுக்குள் 3.5 முதல் 34.6 அடி வரை உயர வாய்ப்புள்ளது எனவும் இதனால் கடலோர நிலத்தடி நீரின் உப்பு தன்மை அதிகரிக்கும், நிலங்கள் அழியும் ஆபத்துள்ளதாகவும் இதன் காரணமாக குஜராத்தில் உள்ள கம்பட் மற்றும் கட்ச், மும்பை மற்றும் கொங்கன் கடலோரம் மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட கூடிய இடங்களாக உள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட கடல் மட்ட உயர்வு இரண்டு மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சவூதியில் இஸ்லாமிய புனிதத் தலமான மக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்!


சவூதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் சவூதி அரசால் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெக்காவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தயிப் மற்றும் ஜெட்டா பகுதிகளின் அருகே இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் தகர்க்கப்பட்டாலும், மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் சவூதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாகவும், ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் சவூதி அரசு செயல்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக ஹவுத்தி புரட்சியாளர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ரமலாம் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இந்த சூழலில் மெக்கா நோக்கி ஏவுகணை வீசப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிளிநொச்சியில் இன்று நடந்த அனர்த்தம்; தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய பாலகன் பரிதாபச் சாவு!கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கட் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஆறு வயது மகன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் பற்றி சிறுவனின் குடும்பத்தினர் கூறியதாவது,

தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை திறப்புடன் நிறுத்தி வைத்து உணவருந்திக்கொண்டிருந்துள்ளார்.

அந்தச் சமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி அதனை இயக்கியுள்ளர்.

இதனால் உழவியந்திரம் நகரத்தொடங்கி அருகில் உள்ள மரத்துடன் மோதியபோது குறித்த சிறுவன் தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் எனவும் வகுப்பில் மிகவும் துடிப்புள்ள மாணவனாக இருந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்லது.

இந்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.வவுனியாவில் நிலவிய பதற்றம்; அகதிகள் முகாமிற்குள் பிக்குகள் நுழைய முயற்சி; பெருமளவு இராணுவம் குவிப்பு!


வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் அங்கு பதற்றம் நிலவியது.

இதனையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது, 

வவுனியாவில் புந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வெளிநாட்டு அகதிகள் சிலர் தாங்க வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மூன்று மதத்தலைவர்கள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிர்ந்த ஏனைய நான்கு பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் சிலரும் பொதுமக்கள் சிலருமாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் இருந்து அகற்றவேண்டும் என தீர்மானித்ததுடன் அவர்கள் இங்கு தங்கவைத்தமை தொடர்பிலும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டனர்.

அத்துடன் குறிப்பிட்ட தினத்திற்குள் அவர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றாவிட்டால் எதிர்ப்பை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தனர். இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிப்பது எனவும் பூந்தோட்டத்தில் வெளிநாட்டு அகதிகளை தங்கவைத்துள்ள முகாமுக்கு செல்வது எனவும் தீர்மானித்து மகஜருடன் அரச அதிபர் பணிமனைக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அரசாங்க அதிபர் இல்லாத காரணத்தினால் மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்ததுடன் அகதிகள் தொடுர்பிலும் கேள்வி எழுப்பினர். எனினும் மேலதிக அரசாங்க அதிபர், அகதிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தொடர்பான எந்த வித விடயங்களும் தம்மிடம் இல்லை எனவும் பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜரை கையளிக்க சென்ற போதிலும் அவர் இல்லாத நிலையில் வேறு ஒருவரிடம் மகஜரை கையளித்த பின்னர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றனர்.

இதன்போது அதிகளவான இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததுடன் முகாமுக்கு செல்லும் பாதையும் பார ஊர்தியினால் வழிமறிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடும் மழைக்கு மத்தியில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் மற்றும் குழுவினர் முகாம் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களை உள் செல்ல முடியாது என தெரிவித்ததுடன் அவர்களை அங்கேயே தடுத்து வைத்திருந்தனர்.

இதன்பேது வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து குழுவினரை செல்ல முடியாது என தெரிவத்ததை அடுத்து பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் தமது கோரிக்கைக்கு பதில் தராத பட்சத்தில் தம்மாலான நடவடிக்கையை ஓரிரு நாட்களில் எடுப்போம் என தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.


மூன்று நாள் களித்து முள்ளிவாய்க்கால் சென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மரணித்த மக்களுக்காக அஞ்சலி!இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு இன்று (21) மாலை விஜயம் மேற்கொண்ட
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் போரில் சிக்குண்டு  மரணித்த அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தினார்.
ரிஷாட் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு


அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானித்தை மேற்கொண்டுள்ளனர்

சற்றுமுன் வவுனியாவில் பாக்கிஸ்தான் மக்களை வவுனியாவில் குடியேற்றியமைக்கு எதிராக களத்தில் குதித்தனர் பெளத்த பிக்குமார்கள்,


மேலும் மேலதிக அரச அதிபரிடம், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரிடமும் மனு கையளிக்கப்படுவதுடன் , பாக்கிஸ்தானியரை இருத்தி வைத்துள்ள பூந்தோட்டம் பலநோக்கு கூட்டுறவு சங்க பயிற்சி கல்லூரிக்கு (புனர்வாழ்வு நிலையம்) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் 
இதேவேளை குறித்த மக்களை இங்கிருந்து அகற்றப்படாமல் விடும் பட்சத்தில் வீதியில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டிவரும் எனவும் பிக்குமார்கள் எச்சரிக்கின்றனர்
இதேவேளை பிக்குமார்கள் கருத்து தெரிவிக்கையில் இங்கு வந்திருப்பவர்கள் விபரம் ஏதும் அரச அதிபருக்கோ,
பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள் ..? ISIS , தெளபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் எனவும் சந்தேகமுள்ளதாக பிக்குமார்கள் தெரிவிக்கின்றனர்

வறணி, சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக தேர்த் திருவிழா நிறுத்தப்பட்டதை அடுத்து மக்கள் சமவுரிமை வேண்டி போராட்டம்!தென்மராட்சி - வறணி, சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக தேர்த் திருவிழா நிறுத்தப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள்,
ஆலயத்தில் அனைவருக்கும் சமவுரிமை வழங்க வேண்டும் என்று சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்னால் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

என் பிள்ளைகளுக்குக் காட்ட ஒரு சிறப்பான தலைவன் இருந்தான் என்ற நிம்மதியோடு வாழ்ந்துவிட்டுப்போகிறேன்-வைத்தியர் சிவச்சந்திரன்தமிழர்களின் அரசியல் தெரிவு மிகவும் மோசமாக இருக்கின்றது என்று நான் பதிவிட்டால், 
நல்லவர்கள் யாரும் வருகிறார்கள் இல்லை இப்போது இருப்பவர்கள்தான் மீண்டும் வருவார்கள் அவர்களுக்குத்தான் வாக்குப்போடனும் என்கிறார்கள் சொம்புகள்.

நீங்கள் இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நல்லவர்கள் வருவார்கள்?

என்னைப்போல நீங்கள் எல்லோரும் " என் தலைவன் நேர்மையானவனாகவும், பொய் சொல்லாதவனாகவும், தமிழினத்தின் தேவையை கருத்திற்கொண்டு இனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு, பாராளுமன்றமே அதிரும்படி விவாவதத்தில் ஈடுபட்டு, உலக நாடுகள் வியந்து பார்த்து தலைவன் என்றால் இப்படி இருக்கனும் என்று சொல்லுபடியானவனாக இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட்டுப் பாருங்கள், புதியவர்களும் ஆளுமையானவர்களும் வருவார்கள். 

அதை விட்டுப்போட்டு சின்னச் சின்ன சுய லாபத்திற்காக தமிழினத்திற்காக சின்னதொரு விடயத்தைக்கூட பெற்றுக்கொடுக்குமளவுக்கு ஆளுமையற்றவர்களை தலைவர் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் உங்களைப்போன்ற தரம் தாழ்ந்த நிலைக்கு என்னை வரச்சொல்லாதீர்கள். என்னைப்பொருத்தளவில், நான் தலைவனென சொல்பவனுக்கு ஒரு தகுதி  வேண்டும். அப்படிப்பட்டவர் இல்லையென்றால், நான் தலைவன் இல்லாமலேயே வாழ்ந்துவிட்டுப்போவேன்.

என் எதிர்காலச் சந்ததியாவது, அப்பா கண்ட கண்டவனையெல்லாம் தலைவனென தூக்கி வைத்து அடிமையாக சுயகெளரவம் இல்லாமல் வாழவில்லை என்று உணர்ந்து அவர்களும் சுய கெளரவத்தோடு வாழட்டும். 

 தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென என் பிள்ளைகளுக்குக் காட்ட ஒரு சிறப்பான தலைவன் இருந்தான் என்ற நிம்மதியோடு வாழ்ந்துவிட்டுப்போகிறேன், நீங்கள் உங்கள் கையாலாக முதுகு வளைந்தவர்களைத் தலைவரென்று உங்கள் பிள்ளைகளுக்கு காட்டி வளர்த்து விடுங்கள். அது உங்கள் இஷ்டம்.

விடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது (படங்கள் இணைப்பு)


முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது .

சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள்,இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி  ஆகியனவும் மீட்க்கப்ட்டன.

மீட்கப்பட்ட உடல் சிதைவில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட  இலக்கதகட்டில் த.வி.பு  ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குடிப்பிடத்தக்கது .
ரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர்,

நாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமைகள் தற்போது இன்னும் மோசமடைந்திருக்கின்றது.

தமிழ் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வன்முறைகளுக்கு, உள்ளாகி வந்திருக்கின்றார்கள். தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் தொடர்பாக, ஒரு அரசியல் தீர்வு பெறுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும்கூட அது இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை.

இவற்றுக்கு முடிவு காண தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அத்தியாவசியம். ஒற்றுமையே தமிழர்களின் பலம். அவர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள்” எனத் தெரிவித்தார்.

எதிரிக்கு மன்னிப்புஉண்டு...துரோகிகளிற்கு மன்னிப்பு இல்லை!சட்டத்தரனி செலஸ்ரின்!ஆலயங்களில் எம் மக்கள் ஏன் சாகிறோம் என தெரியாமல் கொல்லப்பட்டு ஒரு மாதம் கடக்கமுன்னர் சம்பந்தனும் சுமந்திரனும் ரிசாத்தை காப்பாற்ற வேண்டும் என முடிவு எடுத்து, அதை ஏனைய TNA MP மார் மீது திணித்துள்ளார்கள். 
தமிழர் இறந்து கிடக்க,ஏனைய சமூகம் தமிழரை எள்ளி நகையாடும் விதமாக, ரிசாத்திற்கு முட்டுக் கொடுத்து, தமிழரின் இதயத்தில் விசஈட்டி எறிந்த இவர்களிற்கும் நரபலி எடுத்த சஹ்ரானிற்கும் என்னடா வித்தியாசம் இருக்கு?

”அல்லாகூ அக்பர் - அல்லா ஒருவனே கடவுள் ஏனையோர் காபீர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சஹ்ரானின் அயோக்கிய பைத்தியக்காரத்தனத்திற்கும்”

“அரசியல் தீர்வு மட்டுமே ஒரே வழி ஏனைய தீர்வுகளான, தமிழரிற்கு தற்போது மிகவும் தேவையான வேலைவாய்ப்பு, நில பாதுகாப்பு, கல்வி வசதி, யுத்தத்தில் பாதிக்கப்பட்டோரிற்கான இழப்பீடு, வீடமைப்பு, கடன் வசதி, மாணவர்களிற்கான நிதிஉதவி, வீதி பராமரிப்பு, பட்டதாரிகளிற்கான வேலைவாய்ப்பு, அரச இயந்திரத்தில் தமிழரின் இன விகிதாசாத்திற்கு அமையவாவது இட ஒதுக்கீடு போன்ற தமிழரின் உடனடி பிரச்சனைக்கான தீர்வுகள் தேவையில்லை என்ற உங்களின் இருவரின் அயோக்கிய முட்டாள் தனத்திற்கும் என்னடா வேறுபாடு இருக்க முடியும்?

பருவத்தே பயிர் செய்...தேவையானதை அப்போதே கொடு...அதை தடுக்கும் நீங்கள் இருவரும் தமிழரால் கடும் சாபத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதை ஏன் உணருவதில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் பேசி விடயங்களை சரிப்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை...

ஆனால், சம்பந்தன் அப்படி அல்ல...பழமைவாய்ந்த சித்தாந்தங்களின் உறைவிடம்...இந்த சம்பந்தனும் ஒரு விதத்தில் அடிப்படைவாதிதான்...

தற்போதய நிலையில் இந்த “சம்பந்தன் அழிந்து, தொலைந்து, நாசமாய் போக வேண்டும் என தமிழர்கள் திட்டி சாபமிட்டு கொண்டிரிக்கிறார்கள்” என்ற உண்மையை சம்பந்தனிற்கு யாராவது சொல்லி விடுங்கள்.

தமிழர் போராட்டம் துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே தவிர, யுத்த சாணக்கியம் இன்மையால் தோற்கப்படவில்லை.

எத்தனையோ யுத்த தந்திரோபாயங்களை சாணக்கியங்களை பயன்படுத்தி, தமிழர் போராட்டம் இமாலய வெற்றிகளை வாரிக் குவித்திருந்தது. 

ஆனால், அரசியல் யுத்தத்தில் எதுவித சாணக்கியமும் தெரியாமல், தமிழரை தொடர்ந்து தனது முட்டாள்தனத்தால் அவமானப்படுத்திவரும் சம்பந்தனால் நாம் தொடர்ந்து துன்பப்பட முடியாது. அதற்கு துணைபோகும் சுமந்திரனின் சயநலபித்திக்கும் ஒரு அளவு வேண்டும்.

“தமிழர் அனைவரும் முட்டாள்கள் சுமந்திரன் மட்டும் புத்திசாலி என சுமந்திரன் நினைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.”

ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறேன்.

எதிரிக்கு மன்னிப்பு உண்டு...
துரோகிகளிற்கு மன்னிப்பு இல்லை...

தமிழருடன் போரிட்ட சிங்கள தலைமைகளை தமிழர்கள் மன்னிக்கலாம்...மன்னிக்காமலும் விடலாம்.

ஆனால், தமிழரிற்கு துரோகம் செய்த ISIS பயங்கரவாதகளையும் அந்த பயங்கரவாதகளற்கு துணைபோனதாக அனைத்து மக்களாலும் கூறப்படும் ரிசாட், ஹிஸ்புல்லா போன்ற விச ஐந்துக்களையிம், இந்த விச ஐந்துக்களிற்கு துணைபோகும் சம்பந்தன் சுமந்திரன் ஆகிய உங்களையும் தமிழர் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

தமிழரால் தற்போது அதிகம் வெறுக்கப்படுவது மகிந்தவோ கோட்டாவோ அல்ல என்பதையும் அருவருப்பான பூச்சிகள் போல தமிழர்கள் தற்போது பார்ப்பது சம்பந்தன் சுமந்திரன் ஆகிய உங்கள் இருவரையும்தான் என்ற உண்மையை இனியாவது நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

21.04.2019 அன்று குண்டுகளை வெடிக்க வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களிற்கும் எனது அஞ்சலியை உருத்தாக்குகிறேன்.

21.05.2019
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!